
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது, அதனை நிரந்தரமாக மூடும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி நகர மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
இதனால் அந்நகரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸார் குவிக்கப்பட்டதால் பதற்றம் மேலும் அதிகரித்தது. பொது மக்களின் போராட்டத்திற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மக்களின் கொந்தளிப்பை அடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழ அரசு அரசாணை பிறப்பித்து சீல் வைத்தது. இதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், 'ஆலையை மீண்டும் திறக்கலாம்' என கடந்த 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து, ஆலை நிர்வாகம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுது. தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது பற்றி டெல்லியில் பல்வேறு சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை தூத்துக்குடி பண்டாரம்பட்டி, அ.குமரெட்டியாபுரம், மீளாவிட்டான் உள்ளிட்ட கிராமங்களிலும், சுற்றுப்பகுதியிலும் சில வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. தெருக்களிலும் கருப்புக்கொடி கட்டப்பட்டன. தூத்துக்குடி பாத்திமாநகரில் அப்பகுதியினர் சிலர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற சென்றனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது. பின் பொதுமக்கள் சாலையோரம் கருப்புக் கொடியுடன் நின்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதனிடையே தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி கொள்கை முடிவு எடுத்து சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட கலெக்டரை வருகிற 21-ந்தேதி மக்கள் கூட்டமைப்பு சார்பில் சந்திக்க முடிவு செய்து உள்ளனர். டபிள்யூ.சி.சி. சாலையில் ஒன்று திரண்ட அமமுக-வினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு கொடியேந்தி ஸ்டெர்லைட்டை மூடக்கோரி கோஷம் எழுப்பினார்கள்.
திடீரென அவர்கள் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். தூத்துக்குடி புதுத்தெருவில் கருப்பு கொடி ஏற்றிய பொது மக்களை போலீஸ் மிரட்டும் காட்சி வைரலாக பரவி வருகிறது. ஆங்காங்கே ஏற்றப்பட்ட கருப்புக்கொடிகளை அகற்றும் பணிகளில் போலீசார் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களாக தூத்துக்குடியில் பதற்றம் சற்று தணிந்திருந்த நிலையில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்தால் தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment