ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி வழக்கு; விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு:

லண்டன்:
நாடு அறிந்த தொழில் அதிபரும், கிங் பிஷர் நிறுவனங்களின் தலைவருமான விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பி விட்டார். அவர் மீது இந்திய கோர்ட்டுகளில் சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்குகள் போட்டுள்ளன. இந்த வழக்குகளை அவர் எதிர்கொள்வதற்காக, அங்கிருந்து இங்கு நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.
இது தொடர்பான வழக்கில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி விசாரணை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்றது. இங்கிலாந்து அரசின் சி.பி.எஸ். வக்கீல்கள் குழுவினர் மார்க் சம்மர்ஸ் தலைமையில் ஆஜராகி விஜய் மல்லையா, வங்கிக்கடன் மோசடியிலும், சட்டவிரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டதற்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாக இந்திய அரசின் தரப்பில் வாதிட்டனர். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.
கிளாரே மான்ட்கோமெரி தலைமையிலான விஜய் மல்லையா தரப்பு வக்கீல்கள், தொழிலில் ஏற்பட்ட தோல்வியால்தான் அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை, நேர்மையற்ற விதத்தில் மோசடியில் ஈடுபடவில்லை என வாதிட்டனர். மேலும் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு, மொத்த கடன்களில் 80 சதவீதத்தை அவர் 2016-ம் ஆண்டு திரும்பச்செலுத்த முன்வந்தபோது அதை ஏற்க மறுத்து விட்டது எனவும் கூறினர். இப்படி இரு தரப்பிலும் தொடர்ந்து வாதங்கள், எதிர் வாதங்கள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அந்த தீர்ப்பு இன்று (திங்கட்கிழமை) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக விஜய் மல்லையா கோர்ட்டில் ஆஜர் ஆனார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், நீதிமன்றம் எந்தஒரு தீர்ப்பு வழங்கினாலும் என்னுடைய சட்டக்குழு ஆலோசனையை மேற்கொள்ளும் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும். நான் பணத்தை திரும்ப செலுத்துவேன் என்று கூறியதற்கும், இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. இது முற்றிலும் தனித்தனியான விவகாரமாகும்.
கடனை திரும்ப செலுத்துவது தொடர்பான முழு திட்ட அறிக்கையை கர்நாடக நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளேன். அதுதொடர்பாகவும் விசாரணை நடைபெற உள்ளது என்றார். மேலும், இதற்கிடையே பணத்தை திரும்ப செலுத்துவேன் என்ற உங்களுடைய வாக்குறுதியை எப்படி நம்பமுடியும்? என்ற கேள்விக்கு விஜய் மல்லையா பதிலளிக்கையில், இதில் நேர்மை மற்றும் நேர்மற்றது என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. சட்டத்தின்படி நீதிமன்றத்தில் இந்த வாக்குறுதி வழங்கப்பட்டது என்பதை தயவுசெய்து புரிந்துக்கொள்ளுங்கள், யாரும் நீதிமன்றத்தை அவமதிக்க முடியாது. நான் யாருடைய பணத்தையும் திருடவில்லை, பணத்தை திரும்ப செலுத்துவேன் என்பது யாரையும் ஏமாற்றும் நடவடிக்கை கிடையாது எனவும் கூறினார்.
நாடு கடத்த உத்தரவு
விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம் அவரை நாடு கடத்த உத்தரவிட்டது.இந்த தீர்ப்பு குறித்த விவரம் இங்கிலாந்து அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் உண்டு. ஆனால் நாடு கடத்த கோர்ட்டு உத்தரவிட்டு, அதை விஜய் மல்லையா மேல்முறையீடு செய்யவில்லை என்றால் அவரை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை மந்திரி உத்தரவிடுவார். அவர் உத்தரவிட்ட 28 நாளில் அவர் நாடு கடத்தப்பட்டு விடுவார். விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டு விட்டால் அவரை அடைப்பதற்கு மும்பை ஆர்தர் ரோடு சிறை தயாராக உள்ளது. அந்தச் சிறையில் அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகின்றன.
No comments:
Post a Comment