
மார்கழி மாதம் பிறந்து விட்டது. தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக மார்கழி கருதப்படுகிறது. மார்கழி மாதம் என்பது இந்து மதத்திலும், தமிழ் கலாச்சாரத்திலும் மகத்துவம் வாய்ந்தது.
இந்த மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி இந்துக்களின் மிகவும் முக்கியமான பண்டிகையாகும். தமிழில் பன்னிரன்டு மாதங்கள் இருக்க மார்கழி மாதத்திற்க்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்புகள் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.
இதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமான காரணம் விஷ்ணுபகவான். பகவத்கீதையில் உலகின் அனைத்தும் நான்தான் என்று கூறியிருக்கும் பகவான் கிருஷ்ணர், தமிழ் மாதங்களில் நான்தான் மார்கழி என்று கூறியுள்ளார். ஏனெனில் இந்த மாதம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால்தான் இந்த மாதங்களில் பிறப்பதும், இறப்பதும் புண்ணியம் என நம்பப்படுகிறது. மார்கழி மாதம் பற்றி நீங்கள் அறியாத பல அபூர்வ தகல்வல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த மாதம் கடவுள் வழிபாட்டுக்கென அர்ப்பணிக்கப்பட்டது. இது டிசம்பர் மாதத்தில் தொடங்கி ஜனவரி மாதத்தில் முடிவடைகிறது. நமது ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். எனவே இந்த மாதம் என்பது தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தமாகும். பொதுவாகவே காலை நேரம் என்பது தியானத்திற்கு சிறந்த நேரமாகும். எனவேதான் இந்த மாதத்தில் எந்த திருவிழாவும் நடத்தப்படுவதில்லை.
கடவுள் வழிபாடு
ரங்கநாதரின் உறைவிடமான ஸ்ரீரங்கத்தில் 21 நாட்கள் ராப்பத்து மற்றும் பகல்பத்து என்று வழிபாடு நடைபெறும். அனைத்து கோவில்களிலும் காலை நேரத்தில் திருவெம்பாவை பாடப்படும். இந்த மாதத்தில் இருக்கும் சில முக்கிய நாட்கள் என்னவெனில் பாவைநோம்பு, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகும். கார்த்திகை திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில் மார்கழி மாதம்தான் மூடப்படும்.
பஜனையின் முக்கியத்துவம்
மார்கழி மாதத்தின் 30 நாளும் காலையில் ஓசோன் படலம் சூரியன் உதிக்கும் முன்னர் அதிகாலையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும். அதிகாலையில் இந்த காற்றை சுவாசிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதனால்தான் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆண்கள் பஜனை பாடவும், பெண்கள் கோலம் போடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நேரத்தில் கோவிலுக்கு செல்வது உங்கள் உடலுக்கும், மனதிற்கும் மிகவும் நல்லது. நமது சடங்குகளும், கலாச்சாரங்களும் எப்போதும் நமது ஆரோக்கியத்தை மையப்படுத்தியே வடிவமைக்கப்பட்டதாகும்.
குருபகவான்
பகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தமிழின் 12 மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் ஒளியை விண்மீன் மண்டலத்தின் மையத்திற்கும், பூமிக்கும் எதிரொளிக்கிறது. இந்த கிரகங்களில் பூமிக்கு அதிக ஒளி கொடுக்கும் கிரகம் குரு ஆகும். குருபாகவன்தான் நம் வாழ்வில் உள்ள இருளை போக்கும் சக்தி படைத்தவராவார். எனவே இந்த மாதம் தெய்வீகமான மாதமாக கருதப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி விரதம்
ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள் அன்று முழுவதும் அரிசி சாதத்தை சாப்பிடக்கூடாது. நாள் முழுவதும் விஷ்ணுவின் பெயரை உச்சரித்து கொண்டிருக்க வேண்டும். இரவு முழுவதும் தூங்காமல் இருந்து காலை நேரத்தில் கோவிலுக்கு சென்று விஷ்ணுவின் அருளை பெறவேண்டும். அந்த நேரத்தில் சொர்க்கம் அல்லது வைகுண்டத்தின் வாசல் திறந்திருக்கும் என்பது நம்பிக்கையாகும்.
அசுரன் முரண்
ஏகாதசி க்கு பின்னர் ஒரு சுவாரிஸ்யமான கதை உள்ளது. விஷ்ணு புராணத்தில் குறிப்பிட்டுள்ளபடி முரண் என்னும் சக்திவாய்ந்த அசுரன் முனிவர்களையும், ரிஷிகளையும் துன்புறுத்தி வந்தான், அவன் கொடுமைகளை தாங்க முடியாத ரிஷிகள் கைலாயதிற்கு சென்று சிவபெருமானிடம் உதவி கேட்டனர். சிவபெருமானோ அவர்களை விஷ்ணுவிடம் சென்று உதவி கேட்கும்படி கூறினார். அவர்களுக்கு உதவ ஒப்புக்கொண்ட விஷ்ணு அசுரன் முரணுடன் போர்புரிய தொடங்கினார். ஆனால் அவனை வெல்வது விஷ்ணுவுக்கு அவ்வளவு சுலபமானதாக இல்லை.
ஏகாதசி
முரணை அழிக்க சிறப்பு ஆயுதம் வேண்டுமென்பதை உணர்ந்த விஷ்ணு அந்த ஆயுதத்தை செய்ய ஹேமாவதி என்னும் குகைக்கு சென்றார். விஷ்ணுபகவான் ஆயுதம் செய்வதில் மூழ்கியிருந்தபோதுஅவரை வதைக்க முரண் வந்தான். உடனடியாக விஷ்ணுவிடம் இருந்து ஒரு பெண் ஆற்றல் எழுந்து அதன் கோபப்பார்வையின் மூலம் முரணை அழித்தது. அந்த உருவத்திற்கு ஏகாதசி என்று பெயர் வைத்த விஷ்ணு அவர் விரும்பும் வரத்தை கேட்க சொன்னார். அதன்படி ஏகாதசி அன்று விரதம் இருபவர்களுக்கு அவர்களின் பாவங்களில் இருந்து முக்தி அளிக்க வேண்டும் என்று வரம் கேட்டார். விஷ்ணுவும் அவர் கேட்ட வரத்தை வழங்கியதுடன் அவர்கள் ஏகாதசி அன்று விரதமிருப்பவர்கள் தான் இருக்கும் வைகுண்டத்தை அடைவார்கள் என்றும் வரமளித்தார்.
சிவ வழிபாடு
மார்கழி மாதத்தின் பவுர்ணமி நாள் திருவாதிரையாக சிவபெருமான் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சிதம்பரத்தில் இது மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் களி என்னும் பிரசாதம் செய்யப்பட்டு சிவபெருமானுக்கு படைக்கப்படுகிறது. மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை கொண்டு சிவபெருமான் பூஜிக்கப்படுகிறார். திருவாதிரை மட்டுமின்றி மார்கழி மாதம் முழுவதுமே சிவபெருமானை வழிபடுவது உங்கள் வாழ்வின் இருளை போக்கி செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.
திருப்பாவை
திருப்பாவை என்பது கிருஷ்ணரின் தீவிரபக்தையான ஆண்டாள் என்பவரால் பாடப்பட்டது. ஆண்டாள் கிருஷ்ணர் மீது காதலில் விழுந்து அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆண்டாள் கிருஷ்ணருடன் சங்கமித்த பிறகு அவர் பாடிய திருப்பாவை பாடல்கள் மொத்தம் 30 இருந்தது. மார்கழி மாதத்தில் இந்த பாடல்களை பாடி பெண்கள் வழிபட்டால் அவர்களுக்கு சிறந்த கணவன் கிடைப்பார்கள்.
source: boldsky.com
No comments:
Post a Comment